சென்னை : தலைமைச் செயலகத்தில், இன்று (ஜூன்.28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு (10.12.2021) அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட நவிமும்பைத் தமிழ்ச் சங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
அவ்வகையில், நவி மும்பை தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ் இசைக்கு திமுக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு