திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏரி, குளம், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. சாலை, கழிவு நீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தற்போது அதன் மொத்த கொள்ளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் 2 ஆயிரத்து 772 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 21.20 அடி ஆகும். இதில் 18.80 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இன்று (அக்.20) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் புழல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உபரி நீர் திறக்கப்படும் மதகுகள், உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய், நீர் இருப்பு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுதர்சனம், துரை சந்திரசேகர் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!