சென்னை: கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியையும், வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவ.1) தொடங்கி வைத்தார்.
வ.உ.சி வாழ்க்கை வரலாறு அடங்கிய நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை மூன்று நாட்களுக்கு சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதலை வீரர்களின் புகைப்படங்கள்
மேலும் விடுதலை போரில் தமிழகம் புகைப்பட கண்காட்சியில் 1751 ஆம் ஆண்டு முதல் 1947 வரை 250 ஆண்டுகள் இந்திய விடுதலைப் போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த புகைப்படங்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போரின் போது எடுக்கப்பட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வேலு நாச்சியார்,வ.உ.சி, பாரதியார் உள்ளிட்டோர் புகைப்படங்கள் உள்ளன.
![கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-2-cmphotoexbitionopen-7209106_01112021135554_0111f_1635755154_809.jpg)
சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் நாணயங்கள், தபால் தலைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வால், சுருள்வாள், பீரங்கி குண்டு ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
![கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-2-cmphotoexbitionopen-7209106_01112021135554_0111f_1635755154_167.jpg)
அனுமதி இலவசம்
சென்னை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, ஆற்காடு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாகணங்களின் பழைய வரைபடங்களும் சுதந்திரப் போராட்டத்தின்போது வெள்ளையரால் தடை செய்யப்பட்ட தமிழ் அரிய நூல்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விடுதலை வீரர்கள் மற்றும் தியாகிகளின் 50 மணிமண்டபங்கள் அடங்கிய புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் 8 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் எனவும், காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் நிதியுதவி வழங்கிய 'ஜெய் பீம்' சூர்யா!