சென்னை: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.24) தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கூறுகையில்,
- கனமழையால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.
- நிவாரண பொருள்கள் தாமதமின்றி மக்களுக்கு சென்று சேர வேண்டும்.
- பலவீனமான மரங்களை கண்டறிந்து முன்கூட்டியே அகற்ற குழுக்கள் அமைத்து தயார் செய்ய வேண்டும்.
- மீட்பு பணியின்போது பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
- வரும் முன் காப்பதே சிறந்தது. மழை நீர் வடிகால்களை சீரமைத்து, சாலைகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கனமழையால் நீர் வீணாகாமல் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் ராணுவம், விமானப் படை, ஒன்றிய நீர்வள ஆணையம் ஆகிய துறைகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.
- கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து வருவாய் பேரிடர் துறை ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில, மாவட்ட அவசர கட்டுப்பாடு மையங்கள் 24 மணிநேரமும் செயல்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை கட்டணமில்லா 1070 , 1077 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, அனைத்து துறை செயலர்கள், டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்