ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று(மே22) நடைபெற்றது.
அதில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், " கரோனா பெருந்தொற்றை ஒழிக்க வேண்டும் என்பது ஒன்றே நமது இலக்காக இப்போது இருக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து நாம் இங்கு கூடியிருக்கிறோம். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் பரவல் சங்கிலியை உடைப்பதே முக்கியமானது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக்கிய பிரச்னையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு, தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன்படி தமிழகத்திற்கான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்திலிருந்து தினந்தோறும் 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. விமானங்கள் மூலம் காலி டேங்கர்கள் அனுப்பப்பட்டு ரயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், கரோனா தொற்று பரவும் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதை காணமுடிகிறது" என்றார்
தொடர்ந்து, தமிழ்நாட்டில் இம்மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கரோனா தொற்று உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என்றும், ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுடன் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்" என்றார்.
இந்தியாவிலேயே, ஒரு நாளில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகும் விகிதத்தில் தமிழ்நாடு முதலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.