சென்னை: நாட்டின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான SAIL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன்26) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தொழிலதிபர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று போற்றப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ‘திருப்புமுனை மனிதர்’ என்றும் 'இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்றும் போற்றப்பட்ட பத்மவிபூஷன் வி.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக நேற்று (26-06-2022) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன்.
பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), இந்திய எஃகு ஆணையம் (SAIL), மாருதி உத்யோக் என பல நிறுவனங்களிலும் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் இந்திய மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறப்படும். பல்வேறு பிரதமர்களுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றிய பழுத்த அனுபவத்துக்கு சொந்தக்காரரான வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் மற்றும் தொழில்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BHEL மற்றும் மாருதி நிறுவன முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்