முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இங்கே நம்முடைய ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர், அதாவது என்னுடைய தமிழ் ஆசிரியராக இருந்த ஜெயராமன் என்னை வாழ்த்தி பேசுகிறபோது, "உன்னை மாணவனாகப் பெற்றதில் நாம் பெருமை அடைகிறோம்" என்று சொன்னார். நீங்கள் மாணவனாக பெற்றதில் எப்படி பெருமை அடைந்தீர்களோ, உங்களிடத்திலே நான் தமிழ் பாடத்தை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன்.
தமிழைக் கற்றுக் கொள்ளக்கூடிய, தமிழைப் பயிலக் கூடிய வாய்ப்பை மட்டும் நீங்கள் தரவில்லை; சாதாரணமாக நீங்கள் சொல்லித் தரவில்லை. அடித்து, அடித்து சொல்லி கொடுத்தீர்கள். அதுதான் எனக்குப் பெருமை. அப்படிப்பட்ட நிலையில்தான் நான் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்பதிலே பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நான் முதலமைச்சராக இங்கே வரவில்லை. நான் ஒரு மாணவனாக தான், உங்களுடைய பழைய நண்பனாக தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.
நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு நாளைக்குப் போக போகிறோம் என்று நேற்று இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. சாதாரணமாக நான் தூங்குவதே 2 மணி 3 மணிக்குதான். அந்த தூக்கம் கூட சுத்தமாக இல்லாமல், படித்த பள்ளிக்கு போகப் போகிறோமே என்கிற அந்த உணர்வோடு நான் இரவு முழுவதையும் கழித்தேன். ஏனென்றால், மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம்.
இங்கே இருக்கக்கூடிய சிலர் முகத்தை எல்லாம் பார்க்கிறபோது, சில ஆசிரியர்களை பார்க்கிறபோது, குறிப்பாக நம்முடைய தமிழாசிரியர் ஜெயராமனை பார்க்கிறபோது ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’ என்கிற பாட்டுதான் என் ஞாபத்திற்கு வருகிறது. இப்போது எனக்கு அதை பாட வேண்டும் போல ஆசை. உலகத்திலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கடந்தகால இனிமையான நினைவுகள் தான். ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இதுபோன்ற ஞாபகங்கள்தான். எனக்கு இந்த வளாகம் மிக மிக மகிழ்ச்சியான ஞாபகமாக இருக்கிறது.
இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன். இந்தப் பள்ளியில் நான் படிக்கிறபோது நம்முடைய தமிழ் ஆசிரியர் அய்யா ஜெயராமன் அவர்கள் சொன்னது போல, என்னுடைய அப்பா அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகுதான் முதலமைச்சராக ஆனார்.
அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரே சொன்னார், நான் எந்த பந்தாவும் இல்லாமல், ஒரு அமைச்சருடைய மகனாக நான் நடக்கவில்லை. நான் மட்டுமல்ல, என்னுடைய தலைவர் என்னுடைய தந்தையும் அப்படி நடப்பதை விரும்ப மாட்டார். இதெல்லாம் என் கூட படித்தவர்களுக்கு தெரியும். ஆசிரியருக்கே தெரிந்திருக்கிறது. அப்படி என்றால், மாணவர்களுக்கு நிச்சயமாக தெரியும்.
நான் நினைத்துப்பார்க்கிறேன், நாம் அனைவரும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்தித்துக் கொள்கிறோம். மலரும் நினைவு என்று சொல்வார்களே, அதுபோல பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. நான் மேயராக இருந்தபோது பங்கேற்றிருக்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பழைய மாணவன் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். இன்றைக்கு முதலமைச்சர் என்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.
முன்னாள் மாணவர்கள் இணைந்து பல சேவைகள் இந்தப் பள்ளிக்கு செய்து கொண்டிருக்கக்கூடிய அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூட முன்னாள் மாணவர் அழகோடு எடுத்துச் சொன்னார். இந்தப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை எல்லாம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட பரந்த உள்ளத்துக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும்.
தமிழ்நாட்டில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம். அது உங்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி பொறுப்பேற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்று, எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், எத்தனையோ பொது நிகழ்ச்சிகள், எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் என்று எத்தனை நிகழ்ச்சிக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன். இதுதான் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை!