சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் ஆறாவது நாளான இன்று (ஏப்.13) கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதற்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர்பதில் அளித்து, தங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (ஏப்.12) நடைபெற்றது.
இதில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை (செப்.17ஆம் தேதி) சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்ததை போல அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி சமத்துவ நாள் என்று கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஏப்ரல் 14 இனி சமத்துவ நாள்: இதனையடுத்து இந்த ஏற்று, இனி ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அம்பேத்கர் புகழைப் போற்றும் வகையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும். அண்ணல் அம்பேத்கர் எழுதிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பிரதமராகவே செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்' - ஆளூர் ஷா நவாஸ் புகழாரம்