சென்னை: உலக சிக்கன நாள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2021 சிக்கனத்தின் முக்கியவத்துவத்தையும் , சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் நாள் ‘உலக சிக்கன நாளாக’ நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
‘அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ எனும் உலகப் பொதுமறை தந்திட்ட அய்யன் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் இல்லாது அழிந்துவிடும்.
சிறு துளி பெரு வெள்ளம்
எனவே சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த ‘உலக சிக்கன நாள்’ வலியுறுத்துகிறது. ‘சிறு துளி பெரு வெள்ளம்’, ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ போன்ற பொருள் பொதிந்த இப்பொன்வரிகள் சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமிப்பது மிகவும் அவசியம். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பாகும். அஞ்சலகச் சேமிப்பு முதுமைக் காலத்தில் தேவையான பாதுகாப்பினை அளிக்கிறது. எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைந்திட ஒவ்வொரு குடும்பமும் சேமித்திடும் பழக்கத்தினைத் திறம்பட வளர்த்துக் கொள்ள வேண்டும்.
செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு சிறந்த பாதுகாப்பினைத் தருகிறது. அஞ்சலகத்தில் மேலும், சிறுகச் சிறுக சேமிக்கும் இத்தொகை பன்மடங்கு பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.
எனவே, இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாடு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வீட்டிற்கொரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கினை (Recurring Deposit) அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி, சேமித்துப் பயன் பல பெற்றிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
வரவுக்குள் செலவு
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன், உலக சிக்கன நாள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலக சிக்கன நாள் அக்டோபர் அக்டோபர் 30 அன்று தமிழ்நாடு எங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிக்கன நடவடிக்கையைக் கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. “ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை” என வரவுக்குள் செலவு செய்து, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதுடன் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
சேமிப்பு
சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை, எளிதில் எதிர் கொள்ளலாம் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது.
மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை.
தமிழ்நாடு மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன் பல பெற்றிட, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி!