சென்னை: தலைநகர் டெல்லியின் புறநகர் முண்ட்கா பகுதியிலுள்ள சேமிப்புக் கிடங்கில் நேற்று (மே 13) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற 16-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில், "டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள ட்வீட் பதிவில், "நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்தாம் யாத்திரை - பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!