சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஒன்றைக் கூறியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம், அப்போது நிலவிய ஜானகி-ஜெயலலிதா கோஷ்டி சண்டையில் அம்போ என்றுவிடப்பட்டது. பின்னர், 1989-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற கருணாநிதி எம்.ஜி.ஆர். நினைவிடத்தைப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதே பெருந்தன்மையோடுதான், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் நடந்து கொண்ட திமுக தலைவர் மீது, சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு வந்த கூட்டத்தினர், கருணாநிதியின் நினைவிடத்திற்கும் கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில், இப்படி அண்ட புளுகு, ஆகாசப் புளுகு பேசியிருக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறிவித்தபோதும், அதற்கு நிதி ஒதுக்கி அறிவித்தபோதும், எதிர்க்கட்சித் தலைவரோ திமுக. சட்டப்பேரவை உறுப்பினர்களோ ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே
ஆனால், ‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள், கூட்டணி கட்சியினரான பாமக கட்சியினர்தான் என்பதை மறந்து ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல’ பேசி, ஜெயலலிதாவுக்குப் பச்சை துரோகம் செய்திருக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி.
முதலமைச்சர் பழனிசாமியின் இந்தப் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படியான பொய்களை பேசி வருவாரேயானால், அவர் மீது திமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்' இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சசிகலா உடல்நலம் பெற ஓபிஎஸ் மகன் வாழ்த்து!