சென்னை: லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நேற்று (டிச.20) நடைபெற்ற “அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா - 2022” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பை போதிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது. “உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மிக எளிமையான வாசகம்தான், ஆனால் அதே அளவு வலிமையான வாசகமாகவும் இது இருக்கிறது. இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையை பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும் என்றார்.
சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை இயேசுவின் போதனைகள் திரும்ப திரும்ப சொல்கிறது. இத்தகைய பண்புகள் தனிமனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, இந்த நாட்டின் குணங்களாக, ஏன், இந்த உலகத்தின் குணங்களாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களுடைய வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது.
இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியினுடைய தத்துவம்! என பெருமிதம் தெரிவித்தார்.
குறிப்பாக சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் அரசு நம்முடைய கழக அரசு.
* உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
* சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது.
* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.
* கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக தொடங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் கோரிக்கை – சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பானது, அதற்கு பிறகு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அது நீதிமன்றத்தில் இருக்கிறது. கடந்த கழக ஆட்சிக்காலத்திலே உங்களுக்காக அதனை நிறைவேற்றி தந்தவன் தான் இந்த ஸ்டாலின் என்றார்.
அது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று கருதுகிறேன். அதேபோல் இரண்டாவது கோரிக்கை – ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், 2006 - 2011 ஆட்சிக்காலத்தில், ஆதிதிராவிட மக்களுக்கு என்ன சலுகை வழங்கப்பட்டதோ, அதை ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு வழங்கிய ஆட்சி என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் என கூறினார்.
மூன்றாவது கோரிக்கை – உதவித் தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது, அது தொடர்பான கோரிக்கை எடுத்துவைத்து, அதை இன்றைக்கு ஒன்றிய அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலை இருப்பதையும் நம்முடைய இனிகோ எடுத்து சொன்னார்கள் என தெரிவித்தார்.
ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம், காத்திருப்போம். இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள், இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா?. ஒன்றிய அரசு அதை முறையாக செய்வதற்கு முன்வரவில்லை என்று சொன்னால், உறுதியோடு சொல்கிறேன், மாநில அரசு எந்த வகையில் அதற்காக உதவி செய்ய முடியுமோ, அந்த உதவியை நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஆகவே மீண்டும், மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புவது ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மானியம் எப்படி உயர்த்தி வழங்கப்பட்டதோ, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் எப்படி வழங்கப்பட்டு வருகின்றனவோ, இந்த சாதனைகள் நிச்சயமாக தொடரும் என கூறினார்.
* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்ததுதான்.
* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது கரோனா காலத்தில் கல்வியை நிறுத்திய 2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து வந்ததுதான்.
* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஏழை எளிய மக்களை நோக்கி மருத்துவம் சென்றதுதான்.
* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது விபத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கானவரை நம்மைக் காக்கும் 48 திட்டத்தினால் அவர்களுக்கு உயிரைக் காத்ததுதான்.
* கடலில் கால் நனைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுப்பாதை உருவாக்கி அவர்களது மனதை ஈரமாக்கியதில்தான் இந்த ஆட்சியின் அடையாளம் இருக்கிறது.
* இலங்கை தமிழரா, திருநங்கையரா, நரிக்குறவரா, விளிம்புநிலை மக்களா, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளா - அனைவரையும் அரவணைக்கக்கூடிய அரசுதான் திமுக அரசு. அதாவது கருணை வடிவான கலைஞரின் அரசு இது. அன்பு வடிவான அரசாக இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த அரசை மனம் திறந்து பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
இங்கே ஒரு காணொலிக் காட்சி வெளியிடப்பட்டது. நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க பணியாற்ற வேண்டும், பாடுபடவேண்டும்.
இயேசுவின் அன்புக்கட்டளையை பின்பற்றி நம்முடைய மனங்கள் நிறையட்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மா.செ கூட்டத்திற்குப் பின் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம்? - ஓபிஎஸ் பதில்