சென்னை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசியாக, கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜன. 02) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கில் ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞருக்குப் பதிலாக ஆஜராக ஏதுவாக வக்காலத்து மனுத்தாக்கல் செய்ய இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாநில அரசுக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு தொடர முடியுமா, இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், எதிர்கட்சி என்ற முறையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், வக்காலத்து தாக்கல் செய்தால்தான் தங்கள் தரப்பு கருத்தை முன் வைக்க முடியும் எனவும், இந்த வழக்கை திரும்பப் பெற இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.