தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மே 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து, ஜுன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது, சராசரியாக 17ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தினசரி உயிரிழப்பு 400-இல் நீடிக்கிறது.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இந்தக் கூட்டத்தினால், அங்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.