சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(பிப்.9), தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து என்ற ஒரே ஒரு திட்டத்தின் மூலமாக தினந்தோறும் லட்சக்கணக்கான மகளிரின் பாராட்டுகளை இந்த அரசு பெற்று வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் பாராட்டி வருகிறார்கள். மாதம் தோறும் 1000 ரூபாய் பெறக்கூடிய மாணவிகள் பாராட்டி வருகிறார்கள்.
இவை அனைத்தும் இப்போது நம் கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய மகிழ்ச்சிகள். இதேபோல் அனைத்துத் திட்டங்களாலும் மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். அது அரசு அதிகாரிகளாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன? அதில் சுணக்கமோ, முடக்கமோ இருந்தால், அத்திட்டத்தை முழுமையாக முடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை அந்தந்த துறையின் செயலாளர்கள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.
அரசின் ஒரு திட்டத்துக்கு எதாவது தடங்கலோ, தாமதமோ இருந்தால், அது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலேயே கூட்டத்தைக் கூட்டி, உடனடியாக அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம். அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நூலகம் விரைவில் திறக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அதேபோல் சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை கிண்டியில் அமையும் என்று அறிவித்தோம், அதுவும் வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம் அமைக்க டிடிவி தினகரன் புது யோசனை!