சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (அக்.18) ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டத்தில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் தவற விட்டவைகள் என்னென்ன, குறிப்பாக மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் எவையெல்லாம் உள்ளது என நீங்கள் அறிந்து கொள்ள தினமும் நீங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். மேலும், ஊடகம் வழியாக வரக்கூடிய செய்திகளை நீங்கள் பார்க்க வேண்டும்.
குறிப்பாக, உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்னை என்பதை, நீங்கள் உடனடியாக புரிந்து கொள்ள முடியும். அப்படி உங்களது மாவட்டங்கள் பற்றி ஏதாவது செய்தி வந்திருந்தால், அந்த பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். மேலும், எந்த வகையில் தீர்வு காணப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அரசிற்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கக்கூடிய நீங்கள், விளிம்பு நிலை பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் எவ்வித குறையுமில்லாமலும், குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் சென்றடைய மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்பதையும் கன்காணிக்க வேண்டும்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு சங்கர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அக்.31-க்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்கத் திட்டம்; சென்னை மாநகராட்சி கறார்!