நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் ’சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்பட்டவரும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான விவேக், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப்.17) அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். பல லட்சம் மரங்களை மண்ணில் விதைத்த லட்சிய மனிதர், தனது திரையுலகக் கருத்துக்கள் மூலம் தமிழ்நாடு இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட சின்னக்கலைவாணரின் இழப்பு, கலைத் துறைக்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு" எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அன்புச் சகோதரர், ’சின்னக் கலைவாணர்’ விவேக் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்பிய விவேக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.
பத்ம ஸ்ரீ விவேக்கின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ்த் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார். விவேக் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சாஸ்திரத்த பழிக்காதடா சண்டாளா!'