நாளை (ஏப். 14) மலரும் தமிழ்ப் புத்தாண்டிற்காக தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "தமிழ்ப் புத்தாண்டின் புனித சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களில் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மகத்துவத்தைக் குறிக்கிறது.
ஒரு புத்தாண்டு விடியல் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியின் பொதுவான குறிக்கோள், கடின உழைப்புக்குப் புத்துயிர் அளித்தல், கலாசார நெறிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மனிதர்களிடம் மிகவும் இரக்கமுள்ளவராகவும் அக்கறையுள்ளவராகவும் இருப்போம். இந்தத் திருவிழா நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டுவருவதோடு, அனைத்து இலக்குகளிலும் நமது மாநிலத்திற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தட்டும்.
கரோனா தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து திருவிழாவைக் கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தங்கி பாதுகாப்பாக இருங்கள்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஆதிமனிதன் தமிழன்தான்; அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்' என்ற பாவேந்தர் பாரதிதாசன் கவிதைக்கேற்ப, தொன்மையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள், பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிவருகிறார்கள்.
மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.