கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கேரள எல்லையான படந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதிலும பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து தப்பிச் சென்ற கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவந்தனர். இதில் கேரளா தென்மலையில் சந்தேகம்படுபடியாக இருந்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணையில் கைது செய்ப்பட்ட நால்வரில் ஒருவருக்கு வில்சனை சுட்டுக்கொன்றவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது.
இந்நிலையில் இன்று மறைந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வில்சன் மனைவி ஏஞ்சல் மேரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி, எனது மகளுக்கு அரசு வேலையை தருவோம் என்று கூறினார். குற்றவாளிகளை கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். அரசு பணியில் இருக்கும் காவல் அலுவலர்களுக்கு இதுபோன்று துயரம் நிகழக்கூடாது' என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாடு எஸ்.ஐ. கொலை: கேரளாவில் சதித்திட்டம்!