தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்,பி உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், நேற்று மட்டும் 110 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசுடன் இணைந்து வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியை பெற்று, நிவாரணப்பணிகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் விதிகளை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக, தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: