தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும் எந்தவிதமான தொழிலும் தொடங்கப்படாமல் உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நாங்கள் சொல்வதைச் செய்வோம்; சொல்லாததையும் செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன.
புதிய புதிய தொழில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் வரும். அந்த ஆர்வத்தை பயன்படுத்தி தொழில் தொடங்குகிறோம்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் எந்தெந்த மாநிலம் தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலம் என்று தேர்ந்தெடுத்து, இங்கே தொழிலதிபர்கள் வருவார்கள். ஆகவே, இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று இன்றைக்கு தொழிலதிபர்கள் எல்லாம் முடிவு எடுத்துதான் மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்ய முன்வந்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு முன்னர் கூட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினேன். அமைச்சர்கள், துறையைச் சேர்ந்த அலுவலர்கள் எல்லாம் வெளிநாட்டிற்குச் சென்று தொழிலதிபர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அழைத்ததால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன.
அதைக்கூட எதிர்க்கட்சித் தலைவர் குறையாக பேசினார். வீதியிலே சென்றவர்கள் போனவர்கள் எல்லாம் கோட்-சூட் போட்டு அதில் அமர வைத்தீர்கள் என்ற செய்தியை எல்லாம் பத்திரிகையிலே பார்த்தேன். அந்தத் தொழிலதிபர்கள் எல்லாம் எங்களை சந்தித்து வருத்தப்பட்டனர். ஆகவே, தொழில் முதலீட்டை அதிகமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதன் அடிப்படையிலேதான், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றோம்.
உங்களுடைய விருப்பப்படிதான் அரசு நடந்து கொண்டிருக்கிறது. கிராமத்திலே இருப்பவர்களுக்கு கூட வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றபோது, அதற்கு தேவையான மானியத்தை கொடுக்கின்றோம்’ என பேசினார்.