சென்னை: தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியானது. இந்த தேர்வை 8,06,277 பேர் எழுதினர். இவர்களில் மாணவிகள் 4,21,622 பேரும், மாணவர்கள் 3,84,655 பேரும் எழுதியுள்ளனர். தற்போது தேர்வு எழுதியவர்களில் 7,55,998 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்ச்சி விழுக்காடு 93.76ஆக இருக்கிறது.
மாணவர்கள் விகிதம்: இதில் 4,06,105 மாணவிகள் தேர்வாகி 96.32 விழுக்காடு தேர்ச்சியையும், 3,49,893 மாணவர்கள் தேர்வாகி 90.96 விழுக்காடு தேர்ச்சியையும் அடைந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 7,99,717 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,20,209 பேர் தேர்ச்சி பெற்று, 92.3 விழுக்காடு என இருந்தது. இது நடப்பாண்டில் 1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
பள்ளிகள் விகிதம்: அரசுப்பள்ளிகள் 89.06%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%, தனியார் சுயநிதிப்பள்ளிகள் 99.15%, இருபாலர் பள்ளிகள் 94.05%, பெண்கள் பள்ளிகள் 96.37%, ஆண்கள் பள்ளிகள் 86.60% என தேர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது.
பாட விகிதம்: இந்த தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99. 39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தபடியாக வேதியியல் பாடத்தில் 97.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 94.29 விழுக்காடும் மற்றும் இயற்பியலில் 96.4 விழுக்காடும், உயிரியல் பாடத்தில் 98.89 விழுக்காடு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்டம் ரிசல்ட்: அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்களும், கணக்குப்பதிவியியல் பாடத்தில் 4,540 பேரும், கணிதத்தில் 1,858 பேரும், வேதியியலில் 1,500 பேரும், கணினி அறிவியலில் 3,827 பேரும், இயற்பியலில் 634 பேரும் 100 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பில் பெரம்பலூர் 97.95%, விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% பெற்று முதல் மூன்று இடங்களில் தக்க வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியீடு