சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பொதுத் தேர்வு கரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத் துறை அறிவித்திருந்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுள்ள பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ,விலங்கியல் ,புள்ளியியல், கணினி அறிவியல், நுண்ணூயிரியல், உயிர் வேதியியல், நர்சிங் உள்ளிட்ட தொழில் பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்பட உள்ளது.
செய்முறை தேர்வில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு முறை செய்முறை தேர்வு முடிந்தப் பின்னர் ஆய்வகத்தை முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி செய்முறை தேர்வினை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்குப் போதுமான அளவு சானிடைசர் ஏற்பாடு செய்து தரவேண்டும். மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைகளில் சானிடைசர் போட்ட பின்னர் வேதியியல் பொருள்களை உடனடியாக தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னர் ஆய்வுக்குள் செல்ல வேண்டும்.
செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும். ஆய்வகத்திற்கு வருவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை பின்னர் நடத்திக் கொள்ளலாம். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால் அங்கு செய்முறை தேர்வை நடத்தாமல் அருகிலுள்ள பள்ளியில் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்கள் வேதியியல் தேர்வில் வாய் வைத்து ஊதும் செய்முறை தேர்வினை தவிர்க்க வேண்டும். நுண்ணுயிர் கிருமிகள் போன்றவற்றை தொலைநோக்கிக் கருவி மூலம் பார்ப்பதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் .
செய்முறை தேர்வு நடத்துவதற்கு முதன்மை கண்காணிப்பாளர் நியமனம் செய்ய வேண்டும். வேறு பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் புறத் தேர்வர்களாகவும், அதேப் பள்ளி ஆசிரியர்களை அகத் தேர்வர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்முறைத் தேர்வினை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மே மாதம் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் விதிமுறைகளை மீறி மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முயன்ற பள்ளி!