இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு இருந்தால் மட்டுமே அந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் மூலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு மறு தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வர்கள் விடைத்தாளின் நகல் வேண்டும் அல்லது மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணங்களை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல்கள் அரசுத் தேர்வுத் துறை அறிவிக்கும் நாள்களில் தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.