சென்னை: சென்னை வேளச்சேரி 100அடி சாலையில் ஹைஃபை (HIFI) பார் என்ற மதுபானக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு சென்னை தரமணி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் மது அருந்துவதற்காக வந்துள்ளனர். மது அருந்திவிட்டு பாரிலிருந்து புறப்படும் போது பார் ஊழியர் அஜித், அதிக நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணம் தர முடியாது என்று கூறியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவர்கள் சக கல்லூரி மாணவர்களிடம் இது பற்றிக் கூறி 30க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று கத்தி, மதுபாட்டில், கற்கள் கொண்டு மதுபானக்கூடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது மாணவர் ஒருவருக்கும், பார் ஊழியர் அஜித்திற்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பார் உரிமையாளரின் தகவலின்பேரில் அங்கு சென்ற வேளச்சேரி காவல் துறையினர் பார் ஊழியர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: செகந்திராபாத் கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டவர் கைது!