சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (மார்ச் 23) தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்ட மசோதா 2022ஐ மறுஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் கொண்டு வந்த சட்ட மசோதா மீதான விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சி காலத்தில் இந்த தடை மசோதாவை இளைஞர்களின் நலன் கருதி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருந்த போதிலும் மாநில உரிமைகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ள இந்த சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது" என தெரிவித்தார்.
இதனையடுத்து ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கட்சியில் ஒருவருக்குதான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஓபிஎஸ்-க்கு எந்த அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது? என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் பேரவையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அதிமுகவினருடன் வாதத்தில் ஈடுபட்டார். அவரை ஓபிஎஸ் தடுத்து நிறுத்தினார். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ஈபிஎஸ்-ன் கேள்விக்கு விளக்கம் அளித்த பேரவை தலைவர் அப்பாவு, "அவர் முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கலாம். அதேபோல் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுக விவகாரங்களுக்குள் தான் வரவில்லை" என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது மரபை மீறிய செயல் என்றும், அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக இந்த விவாதம் நடைபெறும்போது அருகருகே அமர்ந்திருந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Online Rummy : ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை