சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி (CJ Sanjib Banerjee) கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் (The Supreme Court collegium) குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைசெய்தது.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக ஒன்றிய சட்ட அமைச்சகம் சார்பில் நவம்பர் 15ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைத் தவிர்த்துவிட்டு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சாலை வழியாகத் தனது காரில் இன்று (நவம்பர் 17) காலை மேகாலயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக கொல்கத்தாவிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோதும், தனது காரிலேயே சென்னைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீர்க்கமாகத் தீர்ப்பளித்த சஞ்ஜிப் பானர்ஜி