இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு , தனியார் மருத்துவர்களுடன் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வக வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வார்டுகள், அவசர ஊர்தி வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோரது கைகளை கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும். மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதில் பல்வேறு துறை பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
வைரஸ் குறித்து என்.ஜி.ஓ, சுய உதவிக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களிலும் இவை மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனை