தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் சித்திரைத் திருவிழா காரணமாக, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
அதேபோல் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
நடிகர் விஜய் நீலாங்கரை புனித தோமையர் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ சென்னை பட்டினப்பாக்கத்தில் வாக்களித்தார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அரசுப்பள்ளியில் வாக்களித்தார்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் மத்திய சென்னை தொகுதியில் அமைந்துள்ள தியாகராய நகர் வாக்குச்சாவடியில் காலை 8.30 மணிக்கு வாக்களித்தனர்.
அதேபோல் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தென்சென்னை பகுதியிலுள்ள பள்ளியிலும், நடிகர் கெளதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக் உடன் மத்திய சென்னை தொகுதியிலும் வாக்களித்தனர்.