சென்னை: நொளம்பூர் எஸ்என்பி கார்டன் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருபவர், வெங்கட்ராமன் (48), இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரிடம் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பாபுஜி என்பவர் சினிமா பைனான்சியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாபுஜி வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வெங்கட்ராமன் வீட்டிலிருந்த நகை ஒன்று திடீரென காணாமல் போய் உள்ளது. இது பாபுஜி தான் திருடிச் சென்று இருப்பதாக வெங்கட்ராமன் சந்தேகப்பட்டு நொளம்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், நீண்ட நாட்களாக பைனான்சியராக பணியாற்றிய பாபுஜி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். மேலும் பைனான்சியர் நிறுவனம் நடத்தி வந்த வெங்கட்ராமன் பற்றி வெளியில் அவதூறு பரப்பும் வகையில் பாபுஜி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கட்ராமனும் பாபுஜியை தீவிரமாகத் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த பாபுஜியை வெங்கட்ராமன் கூட்டாளிகள் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து நொளம்பூரில் உள்ள வெங்கட்ராமன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாபுஜியை, வெங்கட்ராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பாபுஜி மயக்கம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து பைனான்சியர் வெங்கட்ராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பாபுஜி உடலை காரில் கொண்டு சென்று கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையோரம் குப்பையில் உடலை போட்டு விட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மறுநாள் காலை கொளப்பாக்கம் பகுதியில் எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதே வேளையில் கோயம்பேடு பகுதியில் ஹோட்டல் முன்பு பாபுஜி கடத்தப்பட்ட தகவலும் கோயம்பேடு போலீசாருக்கு அளித்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் பைனான்சியர் வெங்கட்ராமன் மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பாபுஜியை காரில் குண்டுகட்டாக கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கட்ராமனை (48) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெங்கட்ராமன் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருவதும், ஆட்களை வைத்து பண வசூலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் இவருடன் சினிமாவில் துணை நடிகராக உள்ள புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன் (47) மதுரவாயலைச் சேர்ந்த சரவணன் (29) மற்றும் திலீப் (30) ஆகியோரும் சேர்ந்து பாபுஜியைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதைடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பைனான்சியர் வெங்கட்ராமன் வீட்டில் நகையை திருடிவிட்டுச் சென்று அவரைப் பற்றிய அவதூறாக பேசியதால் தான் பாபுஜியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடி வந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் (35), கிஷோத் (21), சாரதி (19), கார்த்திகேயன் (39) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் சினிமா பைனான்சியர் பாபுஜியை கொலை செய்த வழக்கில் எட்டு பேரை கைது செய்த நிலையில், முக்கியக் குற்றவாளியைப் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு தனிப்படை போலீசார் நேற்று இரவு அமல்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். இவர்தான் பாபுஜியை அடித்துக் கொலை செய்து எரித்ததில் முக்கியக்குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி மூலம் ரூ.175 கோடி மோசடி - திமுக பிரமுகரை கைது செய்து விசாரணை!