சென்னை அடுத்த தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் 140-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதே போல் புரசைவாக்கத்தில் இயங்கி வரும் கிடங்கு பராமரிப்பு பணிக்காக இடிக்கபடுவதால், அங்குள்ள 45 தொழிலாளர்களுக்கும் சிட்லபாக்கம் கிடங்கில் பணி வழங்கபட்டுள்ளது.
இதனால் தங்களுக்கான பணிகள் குறைந்து வருவாய் பாதிக்கபடுவதாக தெரிவித்தும், மேலாளர் லஞ்சம் பெற்றுகொண்டு இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்து சிட்லபாக்கம் கிடங்கின் கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளி ஒருவர் இதனை கண்டித்து கூரையின் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த தொழிலாளியை கீழே இறக்கினர். பதட்டமான சூழல் நிலவியதால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் தொழிலாளர்களுடன் அலுவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.