சென்னை: லோக் ஜனசக்தி கட்சியைத் தோற்றுவித்த தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான், கடந்தாண்டு உயிரிழந்தார். ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பின்னர், அவரது மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைமையை ஏற்ற நிலையில், அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் முதலமைச்சருமான நிதீஷ் குமாருடன் மோதல் போக்கைக் கடைபிடித்தார்.
இதன் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, கடந்த 2019 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டார். தேர்தலில், லோக் ஜனசக்தி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் சிராக் பாஸ்வானுக்குப் பதிலாக ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி குமரை தலைவராக நியமிக்க குரலெழுப்பி வந்தனர்.
இந்நிலையில், கட்சியில் உள்ள ஆறு எம்.பி.க்களில் தலைவர் சிராக் பாஸ்வானைத் தவிர மீதமுள்ள ஐந்து எம்.பி.க்கள் கட்சியைவிட்டு வெளியேறினர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த, சிராக் பாஸ்வானுக்கும், பசுபதி குமார் பராஸுக்கும்தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனிடையே, சென்னையை அடுத்த பல்லாவரத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச்.10) தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக பணியாற்றியதால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கும் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஒற்றுமை இல்லாததால் அவர்கள் பின்னடைவை அடைந்து ஆம் ஆத்மி அந்த மாநிலத்தைக் கைப்பற்றுகிறது.
இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் எங்கள் கட்சியும் போட்டியிட உள்ளது. தனியாகவா அல்லது கூட்டணியுடன் சேர்ந்தா என்பதைத் தமிழ் மாநில தலைவர் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில தலைவர் வித்யாதரன் தேசிய இளைஞர் அணித் தலைவர் பிரணாப்குமார், மாநில இளைஞரணி தலைவர் காசி மாறன் மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாஜக மாபெரும் வெற்றி: ''2024-ம் நமதே!" - குஷி மோடில் பிரதமர் மோடி