திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
இலங்கையில் சீனா பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த சீனா விரும்புகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்படவேண்டும். மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும்" என்றார்.
உள்ளாட்சித்தேர்தல் குறித்த கேள்விக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மக்களுக்கான பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு உண்மையாகவே தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினால், இட ஒதுக்கீடு, மகளிர், எஸ்சி, எஸ்டி தொகுதிகள் முறையாக வரையறுக்கப்பட வேண்டும்.
இப்பிரச்னைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இது தேர்தலைத் தள்ளி வைக்கும் உத்தி என்று சொல்ல முடியாது என்றார்.
இதையும் படிங்க: கோத்தபய வருகைக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!