சென்னை(Vaccine Based News): ஒமைக்ரான் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசியைப் போட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
70 மடங்கு வேகத்தில் பரவுகிறது
அப்போது அவர் கூறியதாவது, "ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை வைரஸ்ஸை விட 70 மடங்கு வேகத்தில் பரவுகிறது. அதுமட்டுமின்றி தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகிறது.
எனவே மத்திய, மாநில அரசுகள் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதைத் தடுத்திடக் கூடுதல் கவனத்துடன், அறிவியல் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
![ஒமிக்கிரான் கரோனா வைரஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13968987_cc1.jpg)
ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டிருந்தாலும், மேலும் பல நாடுகளில் இது இருப்பதற்கான வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே, ஆபத்து அதிகமுள்ள நாடு, ஆபத்து குறைவான நாடு எனப் பிரித்து வெறும் 12 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களை மட்டும் பரிசோதிக்கும் நடைமுறைக் கூடாது.
மரபியல் மாற்றம் பரிசோதனை
அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழும், கரோனா தொற்று இல்லை என 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் விமான நிலையங்களில் மீண்டும் துரித ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திட வேண்டும். அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
![சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06a-omicron-covid-vaccine-children-script-vedio-7204807_21122021141700_2112f_1640076420_805.jpg)
இந்தியாவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அனைத்து மாநிலங்களிலும் போதுமான எண்ணிக்கையில் செய்வதுடன், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 5 விழுக்காட்டைக் கட்டாயம் மரபியல் மாற்றம் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும். அதன் மூலம் புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் உருவாகிறதா? என்பதை விரைவில் கண்டறிய முடியும்.
பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்
குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் பயன்படுத்த அவசர அனுமதி கிடைத்துவிட்டது. இருப்பினும், மத்திய அரசு அறிவித்தது போல் அக்டோபர், நவம்பர் மாதங்களில், இணை நோயுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கப் படவில்லை. இது வருத்தமளிக்கிறது. எனவே, உடனடியாக அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசியைப் போட வேண்டும்.
![பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13968987_cc.jpg)
கரோனா இரண்டாம் தடுப்பூசி போட்டு 9 மாதம் முடிந்தவுடன், பூஸ்டர் தவணையை ( மூன்றாம் தவணை) வழங்கிடலாம் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. ஐசிஎம்ஆர் அறிவுரையைப் பின்பற்றி முதலில் மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு, பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியைப் போட வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: உலகின் முதல் டெஸ்லா குழந்தை