சென்னை: பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 11 மாத பெண் குழந்தை மற்றும் ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 23) அதிகாலை 1 மணி அளவில் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, குழந்தை அழும் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண்விழித்துப் பார்த்து உள்ளார்.
அப்பொழுது மர்ம நபர் ஒருவர் அவரது குழந்தையிடம் தவறாக நடந்து கொள்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்த போது, அந்த நபர் அளவுக்கதிகமான கஞ்சா போதையிலிருந்து உள்ளார்.
பின்பு அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கயிற்றால் அவரது கைகளைக் கட்டி சிறைபிடித்தனர். இதனையடுத்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (22) என்பதும், இவர் அப்பகுதியில் எந்நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதே நபர், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த போதை ஆசாமி விக்னேஷை, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதை பற்றி அறிந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 50க்கும் மேற்பட்டோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டினம்பாக்கம் காவல்துறையினரின் அலட்சியத்தால் மட்டுமே விக்னேஷ் தப்பியதாகவும், பட்டினம்பாக்கம் காவல்துறையினரின் விசாரணை நம்பிக்கை அளிக்கவில்லை எனக்கூறி மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஞ்சா விக்னேஷ் கைது செய்யப்படவில்லை என்றால் பட்டினம்பாக்கம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சமாதானம் செய்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மயிலாப்பூர் காவல் நிலையம் அருகே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விஷச்சாராயம் விவகாரம்: 11 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி