சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங், நீலாவதி தம்பதி தங்களது மூன்று வயது ஆண் குழந்தை சோம் நாத்துடன் நேற்று முன்தினம் சென்றனர். ஆறாவது நடைமேடையில் குழந்தையுடன் அசதியில் இருவரும் தூங்கிவிட்டனர். இரவு 11.40 மணி அளவில் எழுந்தபோது, தங்கள் அருகில் படுத்திருந்த குழந்தை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரிடம் உடனடியாக புகார் அளித்தனர். இதன்பேரில் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு நபர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையை தூக்கிச் செல்லும் அந்த நபர் யார் என்று காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, கடத்தப்பட்ட குழந்தையை பொதுமக்களில் சிலர் திருப்போரூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்திருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குழந்தையை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், குழந்தையை கடத்தியவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் கோபி ரெட்டி என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீகு வழக்குப் பதிவு செய்து, காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.