சென்னையில் அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து மூன்று நாள்கள் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அரசின் பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்படும் பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
வடசென்னைக்குட்பட்ட கொரட்டூர், மாதவரம், பட்டாளம், புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். மழை நீர் தேங்கிய பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட பணிகள் , நிரந்தரமாக வெளியேற செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முடியும் தருவாயில் இருக்கும் பணிகளை அடுத்த கட்ட மழை தொடங்குவதற்கு முன்பு விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் திப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி சென்னை மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம் - குடிநீர் வாரியம்