சென்னை திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்பிய மருத்துவர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா பாதிப்பால் உயிரிழந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிலேயே 44 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு அரசை குறை கூறும் அரசியல் கட்சித் தலைவர்களின் மத்தியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நாட்டின் எதிர்காலமாக உள்ள மாணவர் சமுதாயம் மன உளைச்சலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. இ-பாஸ் மற்றும் பொது போக்குவரத்து முடக்கம் என்பது கரோனா நோய் அதிகளவில் பரவி விடக்கூடாது என்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவக் கூடாது என்பதை தான் அரசு பிரதான நோக்கமாக வைத்து செயல்படுகிறது.
முதலமைச்சரின் நடவடிக்கையை மாணவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மாணவர்களின் விடிவெள்ளியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: தூய்மையான நகரமாக உள்ளதா மதுரை? என்ன சொல்கிறார்கள் மதுரைவாசிகள்?