சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜன.19) முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறையினருடன் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டல காவல் துணை தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பதியப்பட்ட புகார்களின் மீதான விசாரணை நிலை, கைது நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றப்படாத நிலை இருக்குமானால், சம்மந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் சிறப்பாக பணியாற்றும் காவல் அலுவலர்களை ஊக்குவிக்க வேண்டும்.
காவலர்கள் மக்களின் நம்பிக்கைக்கு முழுமையான பாத்திரமாக இருக்க வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும்" என்று கூறினார்.