சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (மே 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை'-யை தொடங்கி வைத்து, 'முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023'-க்கான 'வீரன், சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட்' ஆகியவற்றை வெளியிட்டார்.
மேலும், 'முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023'-க்கான இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வலைதளத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் வெளியிட்டனர்.
முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் – 2023: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் "நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகளுடன் 12 விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகள் உட்பட 15 விளையாட்டுப் போட்டிகள் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களையும் இணைத்து நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளை நடத்துவதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல ஒருங்கிணைப்புக் குழுவும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலரை ஒருங்கிணைப்பாளாராக கொண்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 38 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,71,351 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.
இதில் அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெறும் அல்லது தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் அல்லது வீரர்கள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் முடிவுற்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வருவதால் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் 2023 மே மாதம் இரண்டாவது வாரத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விழாக்களில் வழங்கப்படும்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற ஜுன் மாதத்தில் மாநில அளவிலான போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 27,000-க்கும் மேற்பட்ட முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவிலான போட்டியில், பதக்க நிலைக்கு ஏற்ப அதிக புள்ளிகள் பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்திட தமிழ்நாடு அரசால் 50.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.