தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசுகையில்,"காவிரி குறித்த தமிழ்நாடு அரசின் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்கிற 8 பக்கம் உள்ள ஒரு விரிவான கடிதத்தை நான் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கொடுத்தேன்.
முழுவதும் படித்து பார்த்து அத்தனை கருத்துகளும் வரவேற்கத்தக்கது. இது ஆட்சிக்கு மிகுந்த உதவிக்கரமாக இருக்கும் என்று கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை உடனடியாக நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், காவிரி கண்காணிப்புக் குழு அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றேன்.
அதேபோல் ராசிமணல் அருகே அணை கட்ட வேண்டும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன் விரைந்து செயல்படுவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார், மிகுந்த நம்பிக்கையோடு இந்த சந்திப்பு நடைபெற்றது.
மேலும், காவிரி ஆற்றில் மாதாந்திர நீர் வழங்குவது குறித்து ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதுவது மரபு என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறேன், ஆனால் முதலமைச்சர் டெல்லி செல்லும்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்திக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளேன். படுக்கை அணை என்ற பெயரில் கர்நாடக அரசு வரம்பு மீறி செயல்படுகிறது.
மார்க்கண்டேய நதியில் தடுப்பு அணை கட்டிய கர்நாடகா அரசை கண்டத்து நாளை காலை (ஜூலை.5) 10 மணியளவில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமையுள்ளது. கர்நாடக முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளது நகைச்சுவையாக உள்ளது" என தெரிவித்தார்.