தமிழ்நாட்டில் கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் நோய்த் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்த நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கோவை பயணம்
கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, அந்த மாவட்ட மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ குழுவுடன் ஆலோசித்து அந்த பணிகளை விரிவுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே.30) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேரடி பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது, திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும், வரவேற்பு எதுவும் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோள்
அரசு பயணமாக செல்ல இருப்பதால், கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கான பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பசியை போக்குங்கள்!
ஊரடங்கு காலத்தில் உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் உணவளிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.