தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சக்கரை, திராட்சை, முந்திரி மற்றும் கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர்
அதன்படி, இன்று (டிச.21) சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
ஒன்பது குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 2ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.
5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2ஆயிரத்து 500 வழங்கப்படவுள்ளது.
இதற்காக 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 80 லட்சம் வேட்டி, சேலை வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி நான்காம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்