சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை. 27) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆற்றிவரும் பணிகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள், இணையதளம் சுலபமாக தொழில் நடத்தும் வசதிகளை (Ease of Doing Business) தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருவதற்காக வளைதளத்தில் சில மாற்றங்களை செய்யவும், சேவைகளை கணினிமயமாக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதிய தொழிற்பயிற்சி நிலையம்
இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர், "பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் நுட்ப பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் தொடங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாம்
புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும், இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும், தொழிற்சாலைகளின் எதிர்கால தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி (Futuristic Employable Skill Training), அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
நலத்திட்ட உதவி
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கான பலன்கள், நலத்திட்ட உதவிகள், குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய திட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கைப்பேசி செயலியை (Mobile App) உருவாக்க வேண்டும்.
திறன் பயிற்சி
அரசின் திறன் மேம்பாடு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் திறன் பயிற்சிகள் வழங்க வேண்டும். தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.
மாடு வளர்ப்பு
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து மகளிர், கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக் கோழி, கறவை மாடு வளர்ப்பு குறித்து திறன் பயிற்சி வழங்க வேண்டும். மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை உருவாக்க வேண்டும்.
தனியார் வேலைவாய்ப்பு
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும்.
ஆயுஷ் மருத்துவ பிரிவு
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் தொடங்கப்பட வேண்டும். அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதிகள் உருவாக்க வேண்டும். கூடுதலாக ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்