சென்னை: 15ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்தார்.
அதன் பின் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, "சட்டப்பேரவையில் முதலமைச்சராக பதவி ஏற்கும்போது ஒரு மாதங்களில் ஆட்சிக் கவிழ்ந்து விடும் என திமுகவினர் கூறினர்.
ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிக்கரமாக முடித்துள்ளோம். அரசுக்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனமார்ந்த நன்றி. நான் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். அரசுக்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
அரசு திட்டங்களை வேகமாகவும் துரிதமாகவும் செயல்படுத்திய அரசு துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள், அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி இடுபொருள் நிவாரணம் வழங்கியது. வறட்சி காலத்திலும், வெள்ளம் வந்தபோதும், பருவமழை பொய்த்த போதும் வேளாண் மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும் அதிமுக அரசுதான்.
தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அந்த வகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்கும் விதமாக பெரும்பான்மை இடங்களில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க சபதம் ஏற்றுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: இபிஎஸ்-ஓபிஎஸ் அவதார புருஷர்கள்! - அமைச்சர்கள் புகழாரம்!