சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கடந்த வாரத்தில் முதலமைச்சர் இல்லத்திலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் அமைச்சர்கள் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் (அக்.07) அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேபோல், முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பிலும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தான் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இன்று இரவு வந்தடைகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க:ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பெரியகுளம் பண்ணை வீட்டில் குவிந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள்!