தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில், அனைத்து மாவட்ட ஆட்சியருடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட ஊரடங்கிற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், வருகின்ற மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகள், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறப்பு, நீச்சல் குளம் திறப்பு, திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதி, கரோனா தடுப்பு ஊசி போடுவதை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முக்கிய அறிவிப்புகள் இன்று அல்லது நாளை மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில், காணொலிக் காட்சி மூலமாக ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ( ICMR ) விஞ்ஞானியும், சென்னை, தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான பிரதீப் கவுர், உலகச் சுகாதார அமைப்பு (தமிழ்நாடு) முதுநிலை மண்டல குழுத் தலைவர் கே.என்.அருண் குமார், ஈரோட்டிலிருந்து இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் (தமிழ்நாடு) பி . ராமகிருஷ்ணன், வேலூரிலிருந்து கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜெ.வி.பீட்டர், அரசு மருத்துவக்குழு நிபுணர்கள், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மெரினாவில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!