கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, இ- பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
அண்மையில், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், இ- பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்தால் கரோனா தடுப்புப் பணிகள் மிகுந்த சவாலாகிவிடக்கூடும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
இந்நிலையில், இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா? என்பது குறித்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இது குறித்து தலைமைச் செயலர் க. சண்முகம், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் நேற்று (ஆக.24) ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இ-பாஸ் ரத்து செய்வது குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.