மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிகளவில் பாதிப்புள்ள மாவட்டங்களில் ஊரடங்கு மேலும் கடுமையாக அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வினை எப்போது நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
”மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. மக்கள் ஒத்துழைப்புடன் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்”, என கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.