சிறப்பாக பணியாற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த செப்.24ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்ற மெய்நிகர் விழாவில் (Virtual
Ceremony) இந்திய குடியரசு தலைவர், 2018-19ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லோகநாதனுக்கு விருது தொகையான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழையும், திருச்சிராப்பள்ளி, பிஷாப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தர்ம சாஸ்தாவுக்கு விருது தொகையான 1 லட்சம் ரூபாய், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருவரும் இணைந்து வந்து விருதுகளைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலர் க.சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், மாநில நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கே. விவேகானந்தன், மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ம. செந்தில்குமார், நாட்டு நலப்பணித் திட்ட சென்னை மண்டல இயக்குநர் முனைவர் சி. சாமுவேல் செல்லையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.